Lilypie

Lilypie

Tuesday, August 4, 2009

காட்டு பூனை கதை

இது எங்க பாட்டி சொன்ன கதை. காரண காரியமெல்லாம் கேட்காமல் கதையை கேளுங்க. சரியா?

ஒரு சினையான காட்டுப் பூனை ரோட்டில் வந்து ஒரு கோடு போட்டு உட்கார்ந்தது. அந்த வழியா ஒரு வெத்தலகாரன் போனான்.

“வெத்தலகாரா வெத்தலகாரா உன் பொண்டாட்டி வெத்தலைய போட்டு விரல கடிச்சுட்டா வெத்தலைய போட்டு ஓடு”னு சொல்லியது. வெத்தலைய போட்டு ஓடிட்டான்.

அடுத்து ஒரு பாக்குகாரன் போனான்.

“ பாக்குகாரா உன் பொண்டாட்டி பாக்கு போட்டு நாக்க கடிச்சுட்டா பாக்க போட்டு ஓடு”னு சொல்லியது. பாக்க போட்டு ஓடிட்டான்.

அடுத்து ஒரு சுண்ணாம்புகாரன் போனான்.

“சுண்ணாம்புகாரா சுண்ணாம்புகாரா உன் பொண்டாட்டி சுண்ணாம்பு போட்டு நாக்கு வெந்து கிடக்கறா சுண்ணாம்ப போட்டு ஓடு” னு சொல்லியது. சுண்ணாம்ப போட்டு ஓடிட்டான்.

அடுத்து ஒரு புகையிலைகாரன் போனான். புகையிலகாரா புகையிலகாரா உன் பொண்டாட்டி புகையில போட்டு மயக்கம் வந்து கிடக்கறா புகையிலைய போட்டு ஓடுனு சொல்லியது. புகையிலைய போட்டு ஓடிட்டான்.

எல்லாத்தையும் வைத்து ஒரு வீடு கட்டியது. வெத்தலை தான் ஓலையாம். கொட்ட பாக்கு தான் செங்கலாம். சுண்ணாம்பு தான் சிமெண்ட்டாம். புகையிலை தான் தூண்கலாம்.

புது வீட்டுக்கு குடி போய் நாலு குட்டி போட்டது. குட்டிகளுக்கு வெத்தலை வீராயி, பாக்கு பவளாயி, சுண்ணாம்பு சொறியளவா, புகையிலை பொக்கனாத்தி என்று பெயர் வைத்தது.

ஒரு நாள் அது தன் குட்டிகளிடம் நான் போய் உங்க எல்லாத்துக்கும் சாப்பாடு கொண்டு வருகிறேன். யார் வந்தாலும் கதவு திறக்காதீங்க. நான் வந்தா ஒரு ஓட்டை வழியா வாலை விட்டு காட்டுவேன். வெள்ளையா தெரிஞ்சா மட்டும் கதவு திறங்க என்று சொல்லி விட்டு சென்றது.

இதையெல்லாம் ஒண்டி கேட்ட ஒரு மொண்டி குள்ள நரி ஓட்டைக்குள் வாலை விட்டு காண்பித்தது.

“நீ எங்க அம்மா இல்லை. எங்க அம்மா வால் வெள்ளையாக இருக்கும்” என்று கூறி கதவை திறக்கவில்லை.

அந்த குள்ள நரி வாலுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்து வந்து ஓட்டைக்குள் வாலை விட்டது. நம் அம்மா வந்து விட்டார்கள் என்று கதவை திறக்க எல்லா குட்டிகளும் ஓடின. ஆனால் சுண்ணாம்பு சொறியளவா மட்டும், அது நம்ம அம்மா இல்லை வாலில் கொஞ்சம் கறுப்பாக தெரிகிறது என்றது. மற்ற குட்டிகள் கேட்காமல் போய் கதவை திறந்தன.

சுண்ணாம்பு சொறியளவா மட்டும் ஒளிந்து கொண்டது. உள்ளே வந்த குள்ள நரி சுண்ணாம்பு சொறியளவா தவிர எல்லா குட்டிகளையும் சாப்பிட்டு விட்டு ஓடியது.

சிறிது நேரம் கழித்து வந்த அம்மா பூனையிடம் விஷயத்தை சொல்லி அழுதது சுண்ணாம்பு சொறியளவா. நான் எல்லா நரிகளுக்கும் பிரியாணி விருந்து வைக்கிறேன் பார் என்று சொன்னது.

மறுநாள் எல்லா நரிகளும் விருந்துக்கு வந்தன. அது தான் சமயமென்று ஓட்டு மேல் ஏறி பெரிய கல்லை கீழே தள்ளி விட்டது. எல்லா நரிகளும் நசுங்கி செத்துவிட்டன. ஒரே ஒரு நரி மட்டும் தப்பித்து ஓடி விட்டது.அது மட்டும் ஓடியிருக்காவிட்டால், இன்று நரியினமே இருந்திருக்காது.

-லாஃபிரா.

15 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹாய் குட்டீஸ்

கலக்கல் கதை

நன்றாக எழுத என்னுடைய வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

நல்லா எழுதியிருக்கீங்க

இந்த கதையை நான் கேட்டதே இல்லை

பெயர் வைத்திருப்பது ரொம்ப இரசிக்கும்படியாக இருந்தது

இன்னும் கதை சொல்லுங்கள்.

Menaga Sathia said...

பூனைக்குட்டிகளின் பெயர்கள் நன்றாக இருக்கு.கதையும் அருமை.நானும் இந்த கதையை கேடதில்லை.

சென்ஷி said...

சூப்பர் கதை! பெயர்களும் வித்தியாசமாக இருக்குது. இங்கே பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி .

thalika said...

அம்மா போலவே அறிவார்ந்த பிள்ளைகளாக இருப்பீர்கள் போல..அழகான எழுத்து நடை இன்னும் போக போக இன்னும் அருமையாக எழுத பழகுவீர்கள்..ஒரு விஷயம் மட்டும் எனக்கு உருத்துகிறது அந்த சிகப்பு கலர் தான்.அதை மாற்றினால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்

Lafira / Lamin said...

தேன்க்யூ ஸ்டார்ஜன் அன்கிள், சென்ஷி அங்கிள்,ஜமால் அங்கிள், மேனகா ஆண்டி, தளிகா ஆண்டி!

மம்மிதா, டார்க் ஸ்ட்ராபெர்ரி குட்டீஸ்க்கு பிடிச்ச கலர்னு போட்டு கொடுத்தாங்க. இப்போ மாத்திட்டன்.

கோவி.கண்ணன் said...

அருமையான கதை. பாட்டிகள் சொல்லும் கதையும், சொல்லும் முறையும் அருமையாக இருக்கும். காட்டு பூனைன்னு தலைப்பை பார்த்ததும் வந்து படித்தேன். சிறிதும் ஏமாற்றம் இல்லை.

பாராட்டுகள் !

thalika said...

adade appadiyaa.appadinnaa neenga strawberry color ukkemathidungko..en vayasukku dhaan uruthudhu kutteesukku pudichaa saridhaan

Kavi.S said...

அடடா அப்படியா,அந்த நரி மட்டும் ஓடாம இருந்திருந்தா, டோரா கொஞ்சம் சந்தோசமாவாவது இருந்திருக்கும்.:)

கதை நல்லாயிருக்கு சுட்டி.

Lafira / Lamin said...

கவி ஆண்டி நீங்க சொல்றது கரெக்ட்! குள்ள நரி திருடகூடாதுன்னு டோராவுக்கு கத்துற வேலை மிச்சமாயிருக்கும்.

Lafira / Lamin said...

இது ரொம்ப பழைய கதை. எங்க மம்மியோட பாட்டிக்கே தெரியுமாம்.

Jaleela Kamal said...

ரொம்ப பழைய கதையா நான் கேட்டதே இல்லை.

ம்ம் கலக்குங்க உங்கள் மூலமாதான் நான் கதையே கத்துக்கனும்.

Jaleela Kamal said...

பூனை குட்டி களின் பெயரெல்லாம் சூப்பர்.

Biruntha said...

ரொம்ப நல்ல கதையா இருக்கே.. நான் இதுவரை கேட்டதில்லை. ஒவ்வொரு குட்டிகளின் பெயரும் வித்தியாசமாக இருக்கு.

இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.

அன்புடன்
பிருந்தா

cheena (சீனா) said...

செல்லம் லாஃபிரா

நல்லாவே கத சொல்றே

சூப்பர் போ

நல்வாழ்த்துகள் லாஃபிரா

Post a Comment

தமிழில் டைப் பண்ண, தங்கிலிஷில் அடியுங்க!