Monday, December 28, 2009

மம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்

எங்க மம்மி பிறந்த நாளுக்கு நாங்க எழுதிய கவிதை:

பிறந்த நாள் வாழ்த்துகளை பாடுகிறோம்
வாழ்வெல்லாம் நலமாக வாழ்ந்திடுங்கள்!
ஒவ்வொரு வரிகளுமே பாடுகிறோம்
அன்பான கனிவான மொழிகளிலே!!

உங்கள் இதழ் பேசும் வார்த்தைகள்
காதில் சுகமாய் ஒலிக்கிறது
அவை ஒவ்வொன்றும் கவிதைகளாய்
மனதிற்குள் இனிக்கிறது!!

முழு நிலவை போல் உங்கள் முகம்
அதை தினம் காண்பது சுகம் சுகம்!
எல்லா செயலிலும் என்றும் வேகம்
தீராது உங்கள் கலை தாகம்!!
                                       
                                              - லாஃபிரா லாமின்

Wednesday, December 23, 2009

மொட்டிலி விட தெரியுமா?

இன்னிக்கு தான் எங்க ஹாஃபேர்லி ஹாலிடேஸ் ஸ்டார்ட் ஆகுது! இன்னிக்கு நான் ரெண்டு விஷயம் பழகினேன். ஒன்னு பபுள்கம்முல மொட்டிலி விடறது, இன்னொன்னு செஸ் விளையாடுறது!

எனக்கு ரொம்ப நாளா மொட்டிலி விடணும்னு ஆசை... ஆனா, பபுள்கம்மை கையில எடுத்து ஒதட்டுக்கு மேல ஒட்ட வெச்சு ட்ரை பண்ணி பார்ப்பேன். சில சமயம் சட்டையில் ஒட்டிக்கிட்டு மம்மிகிட்ட திட்டு வாங்குவேன். ஆனா, இன்னிக்கு நா எங்க டாடி கூட வெளிய போனப்ப, பபுள்கம் வாங்கினேன். எப்படியோ மொட்டிலி விட்டுட்டேன். எப்படி தெரியுமா? நல்லா மென்னு மென்னு நாக்குல அத உந்தி கொஞ்சம் அகலமாக்கி, பல்லுல லேசா பதிய வெச்சு ஃபூனு ஊதினேன். மொட்டிலி வந்திருச்சு. எனக்கு குஷியாயிருச்சு! உடனே மம்மிக்கு போன் செஞ்சு ‘மம்மி மொட்டிலி விட பழகிட்டேன்’னு  சொன்னேன். இதுக்கு ஒரு ஃபோனா? வீட்டுக்கு வந்தொன்ன சொல்ல் வேண்டியது தானன்னு மம்மி சொல்லறாங்க! என்னோட சந்தோஷம் எனக்குத் தான தெரியும்???

அப்புறம், எனக்கு ரொம்ப நாளா செஸ் விளையாட ஆசை! மொதல்ல வாங்கின செஸ் காயினெல்லாம் தொலைஞ்சு போச்சு... அப்ப நா கேரம் போர்டு செஸ் தான் விளையாடுவேன். அப்படீனா... செஸ் காயின அடுக்கி, ராஜாவால கேரம் மாதிரி சுண்டி விடுவேன். கருப்பு காய் எத்துணை கீழே விழுதோ, அத்துணை பாயிண்ட் நம்மளுக்கு! எனக்கு நாலு வயசு இருக்கும் போது, செஸ் விளையாடறேனு சொன்னப்ப,  மம்மி தான் எனக்கு இதச் சொல்லி கொடுத்துச்சு!

இப்ப நாங்க பெரிய பையனாயிட்டம்ல....! அதான் ஒரிஜினல் செஸ் விளையாடலாம்னு பார்த்தா, காயினெல்லாம் தொலஞ்சு போச்சு! அப்புறம் எங்க முத்து மாமா பத்து நாள் முன்னாடி மலேசியா போறப்ப, எனக்கு அதோட காயின கொடுத்துச்சு! ஒரு வழியா அட்டையை தேடி எடுத்து, டாடிக்கிட்ட கத்துக்கிட்டேன். எனக்கு ஹார்ஸ் தான் ரொம்ப பிடிச்சது... ஏனா, அது தான் ஒரு ஸ்டெப், ஒரு கிராஸ் போகுது! குறுக்க எது இருந்தாலும், தாண்டி தாண்டி போயிருது!

எப்படியோ, ஒரு வழியா கத்துக்கிட்டேன். ஆனாலும் அப்பப்ப குழப்பமா இருக்கு! சில சமயம் மம்மி என்னோட டவுட்ட கிளியர் பண்ணுவாங்க... சில சமயம் ‘போடா சும்மா நச்சாத... எனக்கு வேலை இருக்குது’னு சொல்லிடுவாங்க! ஆனா... எனக்கு தெரிஞ்ச அளவுக்குக் கூட எங்க ஆப்க்காக்கு தெரியல. ஈஸியா வெட்டற மாதிரி இருந்தாக்கூட வெட்ட தெரியல...அதாச்சியும் பரவாயில்லை....ஒரு சோல்ஜரை வெட்டறதுக்காக தன்னோட ரூக்க பலி கொடுக்குது! இது தப்பு தான???

-லாமின்.

Tuesday, December 22, 2009

ஈரோடு பதிவர் சந்திப்பு படங்கள்

அங்கிள்ஸ் & ஆண்ட்டீஸ் எல்லாரும் பதிவர் சங்கமத்தைப் பற்றி என்ன என்னவெல்லாமோ எழுதினாங்க....ஆனா, அங்க லாமின்னு ஒரு குட்டிப் பையன் சுத்தி சுத்தி வந்து எல்லாரையும் போட்டோ எடுத்தானே அத யாராவது எழுதினாங்களா?

அது கூட பரவாயில்லை... ஈரோட்டுக்காரங்களுக்கு புதுசா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு இருக்காங்கல்ல...அந்த ப்ளாக்லயாவது என்னோட ப்ளாக சேர்த்தாங்களா??? ம்...ஹூம்.... நானும் ஈரோடு தானு ஏன் இவங்களுக்கு புரிய மாட்டேங்குது? பொடிப்பையன்னு தான விட்டுட்டீங்க! நான் எவ்வளவு பெரிய ஆள்னு புரிய வைக்கணும்னு தான் விழாவுல நான் எடுத்த எல்லா போட்டோஸையும் இங்க போடறேன்.

விழாவுக்கு வந்திருந்த அங்கிள்ஸ் எல்லாரும், நான் போட்டோ எடுத்திட்டு இருந்ததைப் பார்த்திருப்பீங்க! அவங்கவங்க மூஞ்சிய நல்லா எடுத்திருக்கேனானு பாருங்க! யாரையாச்சும் கவர் பண்ணலைனா ஃபீல் பண்ணாதிங்க! அடுத்தவாட்டி குளோசப்லயே எடுத்திடுறேன்!!

-லாமின்.


Sunday, December 20, 2009

எனக்கும் ப்ளாக் இருக்குல்ல...

மம்மி ப்ளாகர்ஸ் மீட்டுக்கு போயிட்டாங்க. எனக்கும் ப்ளாக் இருக்குல்ல...நானும் வருவேன்னு அடம் பிடிச்சு டாடிகிட்ட சொல்லி கூட்டிட்டு போகச்சொன்னேன்.

எல்லாரும் சிரிச்சுக்கிட்டே இருந்தாங்க. எனக்கு ரொம்ப குஷியா இருந்திச்சு. சுத்தி சுத்தி வந்து எல்லாரையும் போட்டோ எடுத்தேன். ஒவ்வொரு அங்கிளா குளோசப்ல எடுத்தேன்.

எல்லாரும், அவங்க அவங்க ப்ளாக் பேரை சொன்னாங்க. நானும் மைக் வாங்கி, என் பேரையும், என்னோட ப்ளாக் பேரையும் சொன்னேன்.

பெரிசா ஒரு பேனர் ஒட்டி வெச்சிருந்தாங்க. ஒரு அங்கிள் அதை போட்டோ எடுக்க சொன்னார். நான் முதல்லயே அதை அழகா போட்டோ எடுத்திட்டேன். அதை அந்த அங்கிள் கிட்ட காட்டினேன்.

ஒரு அங்கிள் மட்டும் கலர் கலரா சட்டை போட்டுக்கிட்டு எல்லார்கிட்டயும் கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தார். நான் அவரை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

என்னென்னமோ பேசுனாங்க. எனக்கு பாதி புரியவே இல்லை. அனானி அங்கிளைத் தான் எல்லாரும் திட்டினாங்க. யாருன்னே தெரியல. பாவம் அந்த அங்கிள்.

எல்லாரும் சாப்பிட போனாங்க. எனக்கு பிடிச்ச பூரி அங்க இல்லவே இல்ல. பூரி தான் வேணும்னு நான் அடம் பிடிச்சேன். ‘டேய் இது ஹோட்டல் இல்லடா’னு மம்மி திட்டினாங்க.

எதுவுமே சாப்பிடலை. பாயாசம் குடிக்கிறயானு மம்மி கேட்டாங்க. முந்திரி போட்டதுன்னா குடிக்கிறேனு சொன்னேன். குடுத்தாங்க. நல்லா இருந்துச்சு. பாயாசம் மட்டும் ரெண்டு டம்ளர் குடித்தேன். ரொம்ப சூடா இருந்திச்சு. டாடி ஆற வெச்சு குடுத்தாங்க. அப்புறம் ஒரு பழம் சாப்பிட்டேன். என்னுடைய பீடாவை, பாவம் அக்கானு அக்காக்கு கொண்டு வந்து தந்திட்டேன்.

கதிர் அங்கிளோட குட்டி பொண்ணு ஒன்னு வந்திருந்துச்சு. அத என்னோட கேர்ள் ப்ரெண்ட் ஆக்கிக்கலாம்னு பார்த்தேன். என்கிட்ட சரியா பேசவே இல்லை.

எல்லாரும் மம்மிகிட்ட தான் பேசுறாங்க. என்கிட்ட யாருமே சரியா பேசல. என்னோட ப்ளாக் பத்தியும் கேட்கல. அடுத்தவாட்டி, வருவீங்கல்ல....அப்ப பேசிக்கிறேன்!

-லாமின்.

Saturday, September 12, 2009

என் கவிதை

எங்க மிஸ் ஒரு ஆங்கில கவிதை எழுதிட்டு வரச்சொன்னாங்க. அதற்காக நான் எழுதியது:

Sky of Dreams


There is a day,
It is no longer away!
Waiting for the day;
With pleasure and gay,
With the prayers of elders,
We would be the rulers-
Of a developed nation!
Its India in 2020!!

We the young soul
-of India,
Will create a new wave-
Of hope and hard work!
We are the young birds,
Flying in the sky of dreams-
Towards success to succeed!!

-லாஃபிரா

Saturday, September 5, 2009

அ முதல் ஃ வரை

அழகு - உள்ளத்தில் தான் உள்ளது
ஆசிரியர்கள் - விரைவில் என் அம்மாவும்
இளமை - இதற்கு வயது ஒரு தடையில்லை
ஈகை - ஒரு சிறந்த செயல்
உலகம் - நிலையில்லாத ஒன்று
ஊசிப்போன வடை - வெட்டிப்பேச்சு
எனக்கு பிடித்தது - அம்மா
ஏன் இந்த பதிவு - பாயிஜா ஆண்டி அழைத்ததால்
ஐந்து விரல்கள் - அண்ணன் தம்பிகள் போல
ஒரு ஆசை - மம்மி எங்கள் ஸ்கூல் இங்கிலீஷ் டீச்சராக வர வேண்டும் என்று
ஓவியம் வரைவது - எனக்கு பிடிக்கும்.
ஔடதம் - சிறந்த இசை உள்ளத்துக்கு ஔடதம் (மருந்து)
ஃ - எஃகு போன்ற இதயம் வேண்டும்.

நான் அழைப்பது நிஜாம் அங்கிள், வசந்த் அங்கிள், நிலாமதி ஆண்டி!

-லாஃபிரா

Friday, September 4, 2009

முருங்கைகாய் கதை

எங்க வீட்டு தோட்டத்தில், வைத்த முருங்கைமரம், இப்போ தான் முதல் தடவையா காய்க்கிறது. என் தம்பி லாமின் எல்லாத்தையும் ஆசையா பிய்ப்பான். எட்டாத காயை, எங்க டாடி அவனை தூக்கி பிடிப்பார், பிய்த்து விடுவான்.

அன்னிக்கு ஒரு நாள், பிச்சிட்டு இருக்கப்ப, ‘டேய் பார்த்து பூவையும் சேர்த்து பிச்சிடாதே’ என்றார் டாடி!

அதுக்கு அவன், ‘ஏன் டாடி, பிச்சா ஒரு முருங்கைகாய் லாஸ் ஆயிறுமா?’ என்று கேட்டான். நாங்கள் எல்லாரும் சிரிச்சோம்.

முந்தாநாள், எங்க மம்மி ரூம் பேன், பேரிங் மாத்தறதுக்காக எலக்ட்ரீஷியன் கழட்டிட்டு போனார். அன்னிக்கு வீட்டுக்கு எங்க ஆபாமா(பாட்டி) வந்திருந்தாங்க. அப்ப, லாமின்,

‘ஆப்மா மேல பாருங்க’ என்றான்.

மேலே பார்த்தார். பேன் இல்லை, பேன் க்ளாம்ப் ஒரு ஓட்டையில் தெரிந்தது.

அதுக்கு அவன்,

‘ஆப்மா, அங்க ஓட்டை இருக்குல்ல, அங்க இருந்து தான் பேன் பிச்சாங்க’ என்று அப்பாவியாக சொல்கிறான்.

முருங்கைகாயையும் பேனை ஒப்பிட்டு பேசியது, எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பா இருந்தது.

-லாமின்.

Sunday, August 30, 2009

மிக்கி மவுஸ் பிறந்த கதைஅமெரிக்காவின் கான்சாஸ் நகரில் வால்ட் டிஸ்னிக்கு சொந்தமாக ஒரு அலுவலகம் இருந்தது. அதன் அருகில் ஒரு தொட்டியில் இரண்டு எலி குட்டிகள் வசித்து வந்தன. வால்ட் டிஸ்னி சாப்பிட்டு போடும் மிச்சங்களுக்காக அவை எப்போதும் சண்டையிட்டு கொண்டே இருக்கும். இதை பார்ப்பதில் டிஸ்னிக்கு தனி குஷி!

அதில் பிரவுன் நிற குட்டி மீது டிஸ்னிக்கு ரொம்பவும் பாசம் அதிகம். அவற்றை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வசதியாக ஒரு கூண்டில் போட்டு வைத்தார். வெளியூர் செல்லும் போது பாதுகாப்பாக அவற்றை ஒரு இடத்தில் விட்டு விடுவார். ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, எலிகளை வரைந்து தன் மனைவியிடம் காட்டி, இதற்கு பெயர் மோள்டிமர் மவுஸ் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் மனைவி, மிக்கி மவுஸ் என்று வைத்தால், பொருத்தமாக இருக்கும் என்று கூறி உள்ளார்.

இப்படி உருவானது தான் மிக்கி மவுஸ். 1928ல் முதல் பிளேன் கிரேஸி என்ற முதல் மிக்கி மவுஸ் படம் வெளிவந்தது. அதில், மிக்கிக்கு குரல் கொடுத்தவரும் டிஸ்னி தான்.

-லாஃபிரா.

Thursday, August 27, 2009

தானே கிழியுது

என்னோட ஷால் கிழிந்திருந்ததை பார்த்து எங்க மம்மி, இப்படி கிழிச்சிட்டியேனு திட்டினாங்க. அதுக்கு நான் சொன்னேன், ‘மம்மி, நான் கிழிக்கலே...அது தானே கிழிஞ்சிருச்சு’ அப்படீனு!

அதுக்கு லாமின் சொல்றான், ‘மம்மி, இப்படித்தான் என் மேத்ஸ் நோட்லயும் பேப்பர் தானே தானே கிழியுது’னு. அவன் சொல்றதை கேட்டா சிரிப்பா வருது!

-லாஃபிரா.

Tuesday, August 25, 2009

கல்வி விற்பனைக்கு

பொதுவா கல்வி இன்னிக்கு வியாபாரம் ஆயிருச்சுன்னு சொல்வாங்க! அதை சாட்சியோட போன ஞாயிறு தினத்தந்தியில் பார்த்தேன்!-லாஃபிரா

Sunday, August 16, 2009

தம்பி ஏற்றிய கொடி

நேற்று சுதந்திர தினத்துக்கு நான் ஸ்கூலுக்கு போயிட்டேன். லாமினுக்கு குட்டீஸ் என்பதால் லீவ். அதனால, எங்க டாடி அவனை பார்க்கில் கலெக்டர் கொடி ஏற்றுவதை பார்க்க கூட்டிட்டு போனார். போய்ட்டு வந்தவனுக்கு அவனும் கொடியேற்ற ஆசை!

பின் வாசலில் கிடந்த ஏணிக்குதிரையை நிமிர்த்தி போட்டு, டம்ளரில் கொஞ்சம் மண்ணை போட்டு, கொடி குத்தி வெச்சிட்டு, நானும் கொடி ஏத்திட்டேன் வந்து எல்லாரும் சல்யூட் பண்ணுங்க என்றான். போய் பார்த்து எல்லாரும் சிரித்தோம்.

- லாஃபிரா

Thursday, August 13, 2009

ஹேப்பி பர்த் டே டூ யூ

லாமின் கண்ணே
மாணிக்க மயிலே
மதியின் சுடரே

கணிப்பொறி சிறுவனே
என் குட்டி தம்பியே!

பிறந்தநாள் உனக்கு
உன்மேல் பிரியம் எனக்கு!

உன் ஆப்கா பாடுகிறேன்
பிறந்தநாள் வாழ்த்துதனை!

சீரோடு சிறப்போடு
நெடுங்காலம் வாழ்ந்திடுவாய்!
நல்ல பெயர் எடுத்திடுவாய்!!

-லாஃபிரா

Friday, August 7, 2009

புக் ஃபெஸ்டிவல் காமடி

எங்க மம்மியும் டாடியும் மூன்று தடவை புக் ஃபெஸ்டிவலுக்கு போயிட்டு வந்துட்டாங்க. ஆனா, எங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டே போகல. நேற்று எங்க ஸ்கூலில், இண்டிபெண்டன்ஸ் டே கல்சுரல் ப்ரோக்ராம்க்கு ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டுருந்தாங்க. அதுல கலந்துக்காதவங்கல எல்லாம் பஸ்ல புக் ஃபெஸ்டிவலுக்கு கூட்டிட்டு போனாங்க. நானும் போனேன்.

மொதோ நாளே சொல்லியிருந்தா பணம் கொண்டு வந்திருப்போம். எதாவது வாங்கி இருக்கலாம், யூஸ்ஃபுல்லா. திடீர்னு போனதுனால, யார் கைலயும் பணம் இல்ல. சும்மா வேடிக்கை தான் பார்த்தோம்.

எங்க மிஸ், புக்ஸ் பிடிச்சிருந்தா, பார்த்து வெச்சுக்கங்க. அப்புறமா பேரண்ட்ஸோட வந்து வாங்கிக்கங்கன்னு சொன்னாங்க.

என் பிரெண்டு (பேர் சொன்னா கோச்சுக்குவாளோனு பயமா இருக்குங்க)! ஒருத்தி! அவளுக்கு ராபின் ஹுட் புக்னா ரொம்ப பிடிக்குமாம். எங்க பார்த்தாலும் வாங்குவாளாம். அவ, அந்த புக்க ஒவ்வொரு ஸ்டால்லயும் தேடிக்கிட்டே இருந்தா.

கடைசியில் ஒரு ஸ்டாலில் அதுவும் ஒரே ஒரு புக் மட்டும் இருந்தது. ஆனா, வாங்க கையில காசு இல்லையே. பேரண்ட்ஸ் கூட வந்து வாங்கறக்குள்ள, அது யாராவது வாங்கிக்கிட்டாங்கன்னா, என்ன பண்ணறதுன்னு அவளுக்கு ஒரே கவலை. என்னடி செய்யலாம்னு கேட்டுட்டே யோசிச்சா.

சரி, இங்கயே எங்காவது இத ஒளிய வெச்சிரலாம்னு, பரபரனு தேடினா, எங்க ஒளிய வைக்கனு... ஒளிய வைக்க இடம் தேடும் போது, நிறைய புக்ஸ் எல்லாம் தள்ளி விட்டுட்டா. எனக்கு ஒரே சிரிப்பா வந்தது, அவ செய்யறத பார்க்க.

கடைசியா, ஒரு அட்டி நிறைய பத்து இருபது புக்குங்க இருந்தது. இந்த புக்க கொண்டு போய், அதுக்கடியில மறைச்சு வெச்சுட்டு வந்திட்டா. பாருங்க, இப்படியெல்லாம் கூட தகிடுதத்தம் நடக்குது! எல்லாம் முன்னாடியே சொல்லாம கூப்பிட்டு போனதுனால தான?

நான் இன்னிக்கு ஸ்கூல் லீவு போட்டுட்டேன். அதனால், அவ, போய் வாங்குனாளா இல்லையானு தெரியல. ஆனா, அவ செஞ்சத நினைத்தா காமெடியா இருக்குங்க!

-லாஃபிரா

Wednesday, August 5, 2009

பூச்சிக்கடி வாங்கிட்டு போங்க

பூச்சிகளுக்கு பாஷை இருந்தால், அதுகளுக்குள் இப்படியெல்லாம் பேசிக்குமோ?!

கொசு இப்படி சொன்னது: நான் ஈ யோட கல்யாணத்துக்கு போக மாட்டேன், ஏனா எனக்கு இன்விடேஷனை ‘ஈ’மெயிலில் அனுப்பல.

பட்டாம்பூச்சி சோர்வாக வந்து உட்கார்ந்தது: அப்பா...Blog To Blog பறந்து பறந்து என் ரெக்கையே வலி எடுத்துக்கிச்சு.

மூட்டைபூச்சியின் அப்பா சம்பந்தியிடம் சொன்னது: கவலைப்படாதிங்க, என் பையன் மூட்டை தூக்கியாச்சும், உங்க பொண்ண கண்கலங்காம காப்பாத்துவான்.

கரப்பான்பூச்சி சட்டை காலரை தூக்கி விட்டுக்கிச்சு: ஆஹா...என் பேருல கூட பதிவர்கள் ஒரு விருது தர்ராங்களாம்.

(பூச்சிக்கடி வாங்கினவங்க, மறக்காம செப்டிக் ஊசி போட்டுக்கங்க!)

-லாஃபிரா.

Tuesday, August 4, 2009

காட்டு பூனை கதை

இது எங்க பாட்டி சொன்ன கதை. காரண காரியமெல்லாம் கேட்காமல் கதையை கேளுங்க. சரியா?

ஒரு சினையான காட்டுப் பூனை ரோட்டில் வந்து ஒரு கோடு போட்டு உட்கார்ந்தது. அந்த வழியா ஒரு வெத்தலகாரன் போனான்.

“வெத்தலகாரா வெத்தலகாரா உன் பொண்டாட்டி வெத்தலைய போட்டு விரல கடிச்சுட்டா வெத்தலைய போட்டு ஓடு”னு சொல்லியது. வெத்தலைய போட்டு ஓடிட்டான்.

அடுத்து ஒரு பாக்குகாரன் போனான்.

“ பாக்குகாரா உன் பொண்டாட்டி பாக்கு போட்டு நாக்க கடிச்சுட்டா பாக்க போட்டு ஓடு”னு சொல்லியது. பாக்க போட்டு ஓடிட்டான்.

அடுத்து ஒரு சுண்ணாம்புகாரன் போனான்.

“சுண்ணாம்புகாரா சுண்ணாம்புகாரா உன் பொண்டாட்டி சுண்ணாம்பு போட்டு நாக்கு வெந்து கிடக்கறா சுண்ணாம்ப போட்டு ஓடு” னு சொல்லியது. சுண்ணாம்ப போட்டு ஓடிட்டான்.

அடுத்து ஒரு புகையிலைகாரன் போனான். புகையிலகாரா புகையிலகாரா உன் பொண்டாட்டி புகையில போட்டு மயக்கம் வந்து கிடக்கறா புகையிலைய போட்டு ஓடுனு சொல்லியது. புகையிலைய போட்டு ஓடிட்டான்.

எல்லாத்தையும் வைத்து ஒரு வீடு கட்டியது. வெத்தலை தான் ஓலையாம். கொட்ட பாக்கு தான் செங்கலாம். சுண்ணாம்பு தான் சிமெண்ட்டாம். புகையிலை தான் தூண்கலாம்.

புது வீட்டுக்கு குடி போய் நாலு குட்டி போட்டது. குட்டிகளுக்கு வெத்தலை வீராயி, பாக்கு பவளாயி, சுண்ணாம்பு சொறியளவா, புகையிலை பொக்கனாத்தி என்று பெயர் வைத்தது.

ஒரு நாள் அது தன் குட்டிகளிடம் நான் போய் உங்க எல்லாத்துக்கும் சாப்பாடு கொண்டு வருகிறேன். யார் வந்தாலும் கதவு திறக்காதீங்க. நான் வந்தா ஒரு ஓட்டை வழியா வாலை விட்டு காட்டுவேன். வெள்ளையா தெரிஞ்சா மட்டும் கதவு திறங்க என்று சொல்லி விட்டு சென்றது.

இதையெல்லாம் ஒண்டி கேட்ட ஒரு மொண்டி குள்ள நரி ஓட்டைக்குள் வாலை விட்டு காண்பித்தது.

“நீ எங்க அம்மா இல்லை. எங்க அம்மா வால் வெள்ளையாக இருக்கும்” என்று கூறி கதவை திறக்கவில்லை.

அந்த குள்ள நரி வாலுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்து வந்து ஓட்டைக்குள் வாலை விட்டது. நம் அம்மா வந்து விட்டார்கள் என்று கதவை திறக்க எல்லா குட்டிகளும் ஓடின. ஆனால் சுண்ணாம்பு சொறியளவா மட்டும், அது நம்ம அம்மா இல்லை வாலில் கொஞ்சம் கறுப்பாக தெரிகிறது என்றது. மற்ற குட்டிகள் கேட்காமல் போய் கதவை திறந்தன.

சுண்ணாம்பு சொறியளவா மட்டும் ஒளிந்து கொண்டது. உள்ளே வந்த குள்ள நரி சுண்ணாம்பு சொறியளவா தவிர எல்லா குட்டிகளையும் சாப்பிட்டு விட்டு ஓடியது.

சிறிது நேரம் கழித்து வந்த அம்மா பூனையிடம் விஷயத்தை சொல்லி அழுதது சுண்ணாம்பு சொறியளவா. நான் எல்லா நரிகளுக்கும் பிரியாணி விருந்து வைக்கிறேன் பார் என்று சொன்னது.

மறுநாள் எல்லா நரிகளும் விருந்துக்கு வந்தன. அது தான் சமயமென்று ஓட்டு மேல் ஏறி பெரிய கல்லை கீழே தள்ளி விட்டது. எல்லா நரிகளும் நசுங்கி செத்துவிட்டன. ஒரே ஒரு நரி மட்டும் தப்பித்து ஓடி விட்டது.அது மட்டும் ஓடியிருக்காவிட்டால், இன்று நரியினமே இருந்திருக்காது.

-லாஃபிரா.

Friday, July 31, 2009

தோழியின் சோகம்

என் உயிர் தோழி சுமார் 15 வருடம் கழித்து பிறந்த ஒரே செல்ல மகள். அப்பா செல்லம். நேற்று இரவு தூங்கிய அவளுடைய அப்பா, காலையில் கண் முழிக்கவே இல்லை. தட்டி எழுப்பின அவங்கம்மா, உண்மையை உணர்ந்து மகளைக் கூப்பிட, அவள் தந்தையின் உடல், சில்லென்று இருந்ததைப் பார்த்து, ‘அம்மா டாடி நம்மை விட்டு போய்விட்டார்’ என்று அழுதுகொண்டே சொல்லியிருக்கிறாள்.

எப்போ இறந்தார் என்றே யாருக்கும் தெரியாதபடி நடு ஜாமத்தில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. நான் சென்று பார்த்து, அவளுக்கு ஆறுதல் சொல்லி வந்தேன். அவள் அழுது கொண்டே இருப்பதைப் பார்க்க பாவமாக இருந்தது.

காலையில் பிறந்து
மாலையில் வாடும்
மலர்களைப் போல்
மலிவாகிவிட்டது மனித உயிர்!

பணமிருக்கு, புகழிருக்கு
சொத்திருக்கு, சுகமிருக்கு,
விடிந்து பார்த்தால் தந்தைக்கு,
உடலில் உயிரில்லை!!

பசிக்கும் போது சோறிருக்கு,
பாசம் காட்ட அப்பா இல்லை.
டாடி டாடி என்றழைக்க
அவளுக்கு இனி யாருமில்லை!!

ஆறுதல் சொல்ல
ஆளிருக்கு!
தேறுதல் கொள்ளுமா
அவள் மனது?

காலம் ஆற்றட்டும்
மன காயத்தை!
கவியாய் வடித்திட்டேன்,
என் சோகத்தை!!

-லாஃபிரா.

Thursday, July 30, 2009

எங்க அக்காவோட ஒரே ஜோக்

ஒரு நாளு நாங்க மொட்ட மாடியில படுத்துக்கிட்டு பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ, நான் ஆப்கா மேல சாஞ்சு படுத்திருந்தேன். ஆப்கா தொண தொணன்னு மூச்சு விடாம பேசிட்டே இருந்திச்சு.

நான் ஏன் ஆப்கா, இப்படி மூச்சு விடாம பேசிக்கிட்டே இருக்கனு கேட்டேன்.

அதுக்கு ஆப்கா, ‘டேய்! நான் மூச்சு விடறேனா இல்லையானு உனக்கு தெரியுமாடா’னு கேக்குது.

அதக் கேட்டு எல்லாரும் சிரி சிரினு சிரிக்கிறாங்க.

-லாமின்.

Wednesday, July 29, 2009

மழை

வானத்தினுள்ளே மின்னல் சென்றதால்

மின்சாரம் பாய்ந்தது வானத்திற்குள்,

இடியும் வந்து இடித்தது!

பாவம் தாங்க முடியவில்லை!!

மாமழையாய் அழுதது வானம்.

அருவியாய் கொட்டிய அம்மழைக்குள்,

மரங்கள் நடனம் ஆடியதை

வகுப்பறை ஜன்னலருகே கண்டேனே!!

-லாஃபிரா.

சூரியன்

தங்க பூமி போல மின்னும்

நெருப்பு சூரியனே! - தங்கத்தின்

விலை என்ன உன்னிடமே?அந்தி சாய்ந்த வேளையிலே

காணக்காண மெல்ல கரைகிறாயே!

செவ்வானம் உன்னை துரத்துதோ?

விண்மீன்கள் உன்னை விரட்டுதோ?

உனக்கும் தூக்கம் வந்திடுச்சோ?!-லாஃபிரா

என் முதல் பதிவு

டியர் ஆண்டீஸ் & அன்கிள்ஸ்,

என் பெயர் லாஃபிரா. என் தம்பி பெயர் லாமின். நான் இந்த ப்ளாக்ல என் கவிதை, கதை, தம்பியின் சேட்டைகள், ஸ்கூலில் நடக்கும் சுவையான விஷயங்கள் எல்லாம் எழுத போகிறேன். நான் 9த் படிக்கிறேன். லீவு நாளில் மட்டும் தான் பதிவு போடுவேன்.

இந்த ப்ளாக், நானும் தம்பியும் சேர்ந்து நடத்தப் போகிறோம். அவனுக்கு டைப் பண்ண தெரியாததால், அவன் சொல்வதையும் அவனுக்காக நான் போடப் போகிறேன்.

மேலே போட்டோவில் இருக்கும் பாப்பா படம், என்னுடைய ஒரு வயதில் எடுத்தது. கீழே இருப்பது என் தம்பி. மம்மி எனக்காக இந்த டெம்ப்ளேட் போட்டுத் தந்தாங்க.

என்னுடைய பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா சொல்லுங்க. தப்பிருந்தாலும் சொல்லுங்க.

-லாஃபிரா லாமின்.

தமிழில் டைப் பண்ண, தங்கிலிஷில் அடியுங்க!