Lilypie

Lilypie

Friday, July 31, 2009

தோழியின் சோகம்

என் உயிர் தோழி சுமார் 15 வருடம் கழித்து பிறந்த ஒரே செல்ல மகள். அப்பா செல்லம். நேற்று இரவு தூங்கிய அவளுடைய அப்பா, காலையில் கண் முழிக்கவே இல்லை. தட்டி எழுப்பின அவங்கம்மா, உண்மையை உணர்ந்து மகளைக் கூப்பிட, அவள் தந்தையின் உடல், சில்லென்று இருந்ததைப் பார்த்து, ‘அம்மா டாடி நம்மை விட்டு போய்விட்டார்’ என்று அழுதுகொண்டே சொல்லியிருக்கிறாள்.

எப்போ இறந்தார் என்றே யாருக்கும் தெரியாதபடி நடு ஜாமத்தில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. நான் சென்று பார்த்து, அவளுக்கு ஆறுதல் சொல்லி வந்தேன். அவள் அழுது கொண்டே இருப்பதைப் பார்க்க பாவமாக இருந்தது.

காலையில் பிறந்து
மாலையில் வாடும்
மலர்களைப் போல்
மலிவாகிவிட்டது மனித உயிர்!

பணமிருக்கு, புகழிருக்கு
சொத்திருக்கு, சுகமிருக்கு,
விடிந்து பார்த்தால் தந்தைக்கு,
உடலில் உயிரில்லை!!

பசிக்கும் போது சோறிருக்கு,
பாசம் காட்ட அப்பா இல்லை.
டாடி டாடி என்றழைக்க
அவளுக்கு இனி யாருமில்லை!!

ஆறுதல் சொல்ல
ஆளிருக்கு!
தேறுதல் கொள்ளுமா
அவள் மனது?

காலம் ஆற்றட்டும்
மன காயத்தை!
கவியாய் வடித்திட்டேன்,
என் சோகத்தை!!

-லாஃபிரா.

Thursday, July 30, 2009

எங்க அக்காவோட ஒரே ஜோக்

ஒரு நாளு நாங்க மொட்ட மாடியில படுத்துக்கிட்டு பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ, நான் ஆப்கா மேல சாஞ்சு படுத்திருந்தேன். ஆப்கா தொண தொணன்னு மூச்சு விடாம பேசிட்டே இருந்திச்சு.

நான் ஏன் ஆப்கா, இப்படி மூச்சு விடாம பேசிக்கிட்டே இருக்கனு கேட்டேன்.

அதுக்கு ஆப்கா, ‘டேய்! நான் மூச்சு விடறேனா இல்லையானு உனக்கு தெரியுமாடா’னு கேக்குது.

அதக் கேட்டு எல்லாரும் சிரி சிரினு சிரிக்கிறாங்க.

-லாமின்.

Wednesday, July 29, 2009

மழை

வானத்தினுள்ளே மின்னல் சென்றதால்

மின்சாரம் பாய்ந்தது வானத்திற்குள்,

இடியும் வந்து இடித்தது!

பாவம் தாங்க முடியவில்லை!!

மாமழையாய் அழுதது வானம்.

அருவியாய் கொட்டிய அம்மழைக்குள்,

மரங்கள் நடனம் ஆடியதை

வகுப்பறை ஜன்னலருகே கண்டேனே!!

-லாஃபிரா.

சூரியன்

தங்க பூமி போல மின்னும்

நெருப்பு சூரியனே! - தங்கத்தின்

விலை என்ன உன்னிடமே?



அந்தி சாய்ந்த வேளையிலே

காணக்காண மெல்ல கரைகிறாயே!

செவ்வானம் உன்னை துரத்துதோ?

விண்மீன்கள் உன்னை விரட்டுதோ?

உனக்கும் தூக்கம் வந்திடுச்சோ?!



-லாஃபிரா

என் முதல் பதிவு

டியர் ஆண்டீஸ் & அன்கிள்ஸ்,

என் பெயர் லாஃபிரா. என் தம்பி பெயர் லாமின். நான் இந்த ப்ளாக்ல என் கவிதை, கதை, தம்பியின் சேட்டைகள், ஸ்கூலில் நடக்கும் சுவையான விஷயங்கள் எல்லாம் எழுத போகிறேன். நான் 9த் படிக்கிறேன். லீவு நாளில் மட்டும் தான் பதிவு போடுவேன்.

இந்த ப்ளாக், நானும் தம்பியும் சேர்ந்து நடத்தப் போகிறோம். அவனுக்கு டைப் பண்ண தெரியாததால், அவன் சொல்வதையும் அவனுக்காக நான் போடப் போகிறேன்.

மேலே போட்டோவில் இருக்கும் பாப்பா படம், என்னுடைய ஒரு வயதில் எடுத்தது. கீழே இருப்பது என் தம்பி. மம்மி எனக்காக இந்த டெம்ப்ளேட் போட்டுத் தந்தாங்க.

என்னுடைய பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா சொல்லுங்க. தப்பிருந்தாலும் சொல்லுங்க.

-லாஃபிரா லாமின்.

தமிழில் டைப் பண்ண, தங்கிலிஷில் அடியுங்க!